திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.37 திருமறைக்காடு - கதவடைக்கப் பாடிய பதிகம்
பண் - இந்தளம்
சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.
1
சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித்த கருத்தே.
2
குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித்த லழகே.
3
படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்
கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே.
4
வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்
கானார் கடுவே டுவனான கருத்தே.
5
பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
உலகே முடையாய் கடைதோ றும்முன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.
6
வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ்
சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
மாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல்
காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே.
7
கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே.
8
கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந்
தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்
வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே.
9
வேதம் பலவோமம் வியந்தடி போற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்
ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.
10
காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர் தொழவான் அடைவாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.91 திருமறைக்காடு
பண் - பியந்தைக்காந்தாரம்
பொங்கு வெண்மணற் கானற்
    பொருகடல் திரைதவழ் முத்தங்
கங்கு லாரிருள் போழுங்
    கலிமறைக் காடமர்ந் தார்தாந்
திங்கள் சூடின ரேனுந்
    திரிபுரம் எரித்தன ரேனும்
எங்கும் எங்கள் பிரானார்
    புகழல திகழ்பழி யிலரே.
1
கூனி ளம்பிறை சூடிக்
    கொடுவரித் தோலுடை யாடை
ஆனி லங்கிள ரைந்தும்
    ஆடுவர் பூண்பது மரவங்
கான லங்கழி யோதங்
    கரையொடு கதிர்மணி ததும்பத்
தேன லங்கமழ் சோலைத்
    திருமறைக் காடமர்ந் தாரே.
2
நுண்ணி தாய்வெளி தாகி
    நூல்கிடந் திலங்கு பொன்மார்பிற்
பண்ணி யாழென முரலும்
    பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி
    வலவல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார்
    கலிமறைக் காடமர்ந் தாரே.
3
ஏழை வெண்குரு கயலே
    யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந்
    தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண்
    மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக
    நினைபவர் வினைநலி விலரே.
4
அரவம் வீக்கிய அரையும்
    அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாஞ்செய்த பாவம்
    பறைதர வருளுவர் பதிதான்
மரவம் நீடுயர் சோலை
    மழலைவண் டியாழ்செயும் மறைக்காட்
டிரவும் எல்லியும் பகலும்
    ஏத்துதல் குணமெ னலாமே.
5
பல்லி லோடுகை யேந்திப்
    பாடியும் ஆடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும்
    அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம்
    புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
மல்கு வெண்டிரை யோதம்
    மாமறைக் காடது தானே.
6
நாகந் தான்கயி றாக
    நளிர்வரை யதற்கு மத்தாகப்
பாகந் தேவரொ டசுரர்
    படுகடல் அளறெழக் கடைய
வே நஞ்செழ ஆங்கே
    செருவொடும் இரிந்தெங்கு மோட
ஆகந் தன்னில்வைத் தமிர்தம்
    ஆக்குவித் தான்மறைக் காடே.
7
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்
    தனதொரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை
    யெடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத் தன்திரு விரலா
    லூன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப்
    பரிந்தவன் பதிமறைக் காடே.
8
விண்ட மாமல ரோனும்
    விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய
    பரிசினன் அவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதங்
    கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை
    மாமறைக் காடது தானே.
9
பெரிய வாகிய குடையும்
    பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக்
    கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோது
    மவர்திறம் ஒழிந்து நம்மடிகள்
பெரிய சீர்மறைக் காடே
    பேணுமின் மனமுடை யீரே.
10
மையுலாம் பொழில் சூழ்ந்த
    மாமறைக் காடமர்ந் தாரைக்
கையினாற் றொழு தெழுவான்
    காழியுள் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ்
    சிந்தையுள் சேர்க்க வல்லார்போய்ப்
பொய்யில் வானவ ரொடும்
    புகவலர் கொளவலர் புகழே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com